உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புதிய பட்டாச்சாரியார்: பொதுமக்கள் எதிர்ப்பு!

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புதிய பட்டாச்சாரியார்: பொதுமக்கள் எதிர்ப்பு!

கடலூர் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், புதிய பட்டாச்சாரியாரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், வரும் 25ம் தேதி சம்ப்ரோக்ஷணம் நடைபெறுமா என்ற பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

கடலூர், திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் நடுநாட்டு திருப்பதி என வைணவ பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு அதே பகுதியில் உள்ள அந்தணர் குடும்பத்தினர் அத்யாபாராயணம் (பின் வேதம் படித்தல்), வேதபாராயணம்(சுவாமிக்கு முன்பாக வேதம் படித்து செல்லுதல்), பட்டாச்சாரியார் (பூஜை செய்தல்), ஸ்ரீபாதம் தாங்கி (உற்சவர்களை தூக்கிச் செல்பவர்கள்) சேவை செய்து வருகின்றனர்.
நீலமேக பட்டாச்சாரியார் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக கோவிலில் பூஜை செய்து வருகின்றனர். வேதம் படிப்பவர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

யாகசாலை: இந் நிலையில் கோவிலைப் புதுப்பித்து, வரும் 25ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் காலை யாகசாலை பூஜை துவங்க வேண்டியுள்ளதால், இறுதிக்கட்ட திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கோவிலில் பூஜை செய்து வரும் நீலமேக பட்டாச்சாரியாருக்கு நேற்று முன்தினம் பணி ஓய்வு உத்தரவை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர். அதில், நீலமேகப் பட்டாச்சாரியாருக்கு 83 வயது ஆகிவிட்டதால் பணி ஓய்வு அளிப்பதாகவும், அவருக்குப் பதிலாக அவரது மகன் நரசிம்மன் பட்டாச்சாரியார் கோவில் பூஜைகளை கவனிப்பார் என கூறப்பட்டிருந்தது. திருப்பணியை முன்னின்று நடத்திய நீலமேகம் பட்டாச்சாரியார், நாளை மறுதினம் துவங்க உள்ள யாகசாலை பூஜையை தலைமையேற்று நடத்த வேண்டிய நிலையில் திடீரென அவருக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பணி ஓய்வு வழங்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பணி நீக்கம்: இந்நிலையில் கோவில் பட்டாச்சாரியாராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்ட நரசிம்மனை தற்காலிக பணிநீக்கம் செய்ததாக தகவல் பரவியது. இதையடுத்து கோவில் திருப்பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் பிரமுகர்கள் பணியை நிறுத்திவிட்டு கோவில் முன் திரண்டனர். மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் அதிகாரிகளை பொது மக்கள் சந்தித்து கோவில் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், கோவில் திருப்பணிக்கு உள்ளூர் பிரமுகர்கள் பலர் பொருளுதவி வழங்கி உள்ளனர். அவர்களை யாகசாலை பூஜை மற்றும் சம்ப்ரோக்ஷணத்தின் போது மரியாதை செய்ய வேண்டும். அதற்கு இக்கோவில் பட்டாச்சாரியாரை கொண்டு சம்ப்ரோக்ஷணம் நடத்தினால் மட்டுமே சரியாக இருக்கும். சம்ப்ரோக்ஷணம் நடக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் அவசியமா என பொது மக்கள் மற்றும் பக்தர்கள் ஆவேசமடைந்துள்ளனர். அதற்கு, உதவி ஆணையர் இது அரசின் உத்தரவு. நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை எனக் கூறினார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நீங்கள் புதிய பட்டாச்சாரியர்களை நியமித்தால் சம்ப்ரோக்ஷணத்தை நடத்த விடமாட்டோம் என ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறினர்.

தாக்கு: அப்போது, கோவில் பட்டாச்சாரியார்களாக பொறுப்பேற்க காரில் வந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்பிலியப்பர் கோவில் பட்டாச்சாரியர்கள் குட்டிகண்ணன், ஸ்ரீதர், கண்ணன் ஆகியோரை வழிமறித்து தாக்கினர். மேலும், அவர்கள் வந்த காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

பட்டாச்சாரியார்கள் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிப்பு: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் அர்ச்சனை செய்து வந்த நீலமேகப்பட்டாச்சாரியார் நேற்று முதல் கோவில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கோவில் நிர்வாகத்தை அவரது மகன் நரசிம்ம பட்டாச்சாரியாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நரசிம்ம பட்டாச்சாரியார் அவரது மகன் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது புகார்கள் உள்ளதால், இருவரும் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் 2 பேரும் கோவிலில் பூஜை பணிகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இருவரும் தங்கள் வசம் உள்ள கோவிலுக்கு சொந்தமான நகைகள், வஸ்திரங்கள், பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட அத்தனை இனங்களையும், தற்போது கோவில் பூஜை பணிகளை கவனிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள, ஸ்ரீதர் என்கிற துவாரகநாத பட்டாச்சாரியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகல் போலீசார் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நீலமேக பட்டாச்சாரியார் வீட்டில் நேற்று இரவு 9.30 மணிக்கு ஒட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !