சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்பத்திருவிழா: எதிர்பார்ப்பில் பக்தர்கள்
சின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜனவரியில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். பிரசித்தி பெற்ற சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையானது. கோயில் எதிரேயுள்ள தெப்பத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. நிதி பிரச்னையால் கடந்த 40 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. வரும் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழா நடத்த பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆன்மிக பிரமுகர் தனபால் முருகன் கூறுகையில், ”மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பின்பற்றப்படுவது போன்று ஆறுகால பூஜைகள் இங்கு நடைபெறுகிறது. ஐதீக முறைப்படி தெப்ப திருவிழா நடத்த வேண்டுமென்று அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வைப்பு தொகை செலுத்த வேண்டுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூ. 6 லட்சம் வரை செலுத்த தயாராக உள்ள நிலையில், எவ்வித முன்னெடுப்பிற்கும் அறநிலையத்துறையினர் முன் வருவதில்லை. தெப்பத்தில் உள்ள தாமரை செடிகளை அகற்றி, தெப்ப திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.