ஸ்ரீவி., ஆண்டாள் வைகுண்ட ஏகாதசி விழா: டிச.27ல் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திரு அத்யயன உற்ஸவம் (வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்ஸவம்) டிச.27 ல் துவங்குகிறது. ஜன.6 ல் சொர்க்கவாசல் திறப்பு, ராப்பத்து உற்ஸவம் துவக்கம், ஜன.8 முதல் ஜன.15 வரை மார்கழி எண்ணெய் காப்பு திருவிழாக்கள் நடக்க உள்ளன.
டிச.27 முதல் துவங்கி ஜன.5 வரை நடக்க உள்ள பகல்பத்து உற்ஸவத்தின் முதல் நாளில் மாலை 5:00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பச்சைபரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர்சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சொர்க்கவாசல் திறப்பு: முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஜன.6 நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர்.அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடக்கிறது. அன்று முதல் ஜன.,16 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி பெரியபெருமாள் சன்னதியில் எழுந்தருள்வார். அங்கு திருவாராதனம், அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், சேவாகாலம் என மறுநாள்அதிகாலை 5:30 மணி வரை ராப்பத்து உற்ஸவங்கள் நடக்கிறது.
எண்ணெய்காப்பு உற்ஸவம்: ஜன.8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆண்டாள் எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். பகல் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு சேவை நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் கோயில் பட்டர்கள் அலுவலர்கள் செய்கின்றனர்.