உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகணத்தால் ஆண்களுக்கு தீங்கா? வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு

கிரகணத்தால் ஆண்களுக்கு தீங்கா? வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு

காஞ்சிபுரம்: சூரிய கிரகணத்தால், ஆண்களுக்கு தீங்கு ஏற்படும் என, வதந்தி பரவியதால், காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், வீட்டு வாசலில், அகல் விளக்கு ஏற்றப்பட்டது. ஐந்து நிலைகளை உடைய கங்கண சூரிய கிரகணம், நேற்று காலை, 8:03 முதல், 11:19 வரை ஏற்பட்டது. இந்த கிரகணம் முடிந்தவுடன், கடலில் நீராட வேண்டும். கடலில் குளிக்க முடியாதவர்கள், வீட்டில் தண்ணீரில் கல் உப்பை போட்டு குளித்தால், சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும் என, தகவல் பரவியது.

இந்நிலையில், சூரிய கிரகணத்தால், வீட்டில் உள்ள ஆண்களுக்கு தீங்கு ஏற்படும். இதற்கு பரிகாரமாக, அவரவர் வீட்டு வாசலில், கோலிமிட்டு, அதன் நடுவில் வாழை இலையில் பச்சரிசி வைத்து, வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை ஏற்ப, அகல் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வதந்தி பரவியது. இதனால், காஞ்சிபுரம், திருக்காலிமேடு, அய்யன்பேட்டை, நாயகன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பலரது வீடுகளில், வாசலில் தீபம் ஏற்றப்பட்டது. வீட்டு வாசலில் விளக்கு ஏற்றியவர்களிடம், இதுகுறித்து கேட்டபோது, ‘மொபைல் போனில் வந்த தகவலை நம்பி, வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினோம். எங்களை பார்த்து, தெரு முழுவதும் விளக்கு ஏற்றினர்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !