பெரம்பூர் மார்கழி பஜனையில் மாணவ- மாணவியர் ஆர்வம்
பெரம்பூர்: ஹிந்துக்களின் கலாசாரத்தையும், தெய்வ வழிபாட்டையும் உணர்த்தும், மார்கழி மாத வீதி வழிபாட்டில், பள்ளி மாணவ- - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இறை வழிபாடு மாதமான மார்கழியில், அதிகாலை வேளையில் குளித்து, வாசலில் கோலமிட்டு, அலங்கரித்த பின், இறை வழிபாடு செய்வது, காலம் காலமாக, ஹிந்துக்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்.
இந்த வகையில், பெரம்பூரில், மார்கழி மாத வீதி வழிபாடு நேற்று 29ல், நடந்தது. இதில், தனியார் பள்ளி மாணவ - மாணவியர், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பெரம்பூர், துளசிங்கம் தெருவில் இருந்து நான்கு மாட வீதிகள் வழியாக, மாணவ- - மாணவியர் பஜனை பாடல்களை பாடியும், ஆண்டாள் வேடமிட்டும் ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். பின், கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப் பணியில், மாணவ -மாணவியர் ஈடுபட்டனர்.இதில், நில நிர்வாகத் துறை இணை ஆணையர் பூவராசன் உட்பட, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.