புத்தாண்டு சிறப்பு பூஜை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மழை பெய்யும் நிலையில், சென்னை வடபழநி முருகன் கோயிலில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகனை தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாடு முழுவதும் இன்று புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவிலில் முருகனை தரிசிக்க அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சந்தணக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில் நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புத்தாண்டையொட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு சி.எஸ்.ஜ. தூய ஜேம்ஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதலே புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் துவங்கியது. சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு பின் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.