செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு வெட்டிவேர் அலங்காரம்
 செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்கின்றனர். இதை காண்பதற்கும் சாமி தரிசனம் செய்வதற்கும் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு அன்று இங்கு வருகை தருகின்றனர். இந்த ஆண்டும் செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதை முன்னிட்டு நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு ஹோமமும் நடந்தது. பகல் ஒரு மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை வெட்டிவேர் அலங்காரம் செய்தனர்.
இன்று காலை 6 மணிக்கு மகா தீபாராதனை செய்து சாமி தரிசனம் தொடங்கியது. மாலை வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந் அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு குழுவினர், செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணி குழுவினர், கமலக்கன்னி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சிபஸ் நிலையத்தில் இருந்து செஞ்சிக் கோட்டைக்கு சிறப்பு பஸ்களை இயக்கினர்.