திருத்தணி முருகன் கோவில்
திருத்தணி முருகன் கோவிலில், தங்கத்தேர் உருவாக்குவதற்கு ஏதுவாக, முதற் கட்டமாக, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்தேர் செய்வதற்கு, உபயதாரர் ஒருவருக்கு, கோவில் நிர்வாகம் ஆணை வழங்கி, நான்கு மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், பிரம்மோற்சவங்கள் நடக்கும் போது, மாடவீதியில் உற்சவர், தங்கத்தேர், வெள்ளித் தேர் ஆகியவற்றில் உலா வருவதற்கு வசதியாக, தங்கத்தேர், வெள்ளித் தேர் கோவிலில் இருந்தன.முறையாக பராமரிக்காததால், ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன.
இதனால், தங்கத்தேர், வெள்ளித்தேர் சேவைகள் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக, வெள்ளி மயில் வாகனம் சேவை இயக்கப்பட்டு வருகிறது.ரூ.25 லட்சம்இந்நிலையில், தங்கத்தேர் செய்வதற்கு ஏதுவாக, மரத்தேர் செய்து தருவதாக பக்தர் ஒருவர் முன் வந்துள்ளார். இந்த உபயதாரர், மரத்தேர் செய்ய அனுமதி தருமாறு, கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து, முறையாக விண்ணப்பம் செய்தார். இதையடுத்து, கோவில் நிர்வாகம், மரத்தேர் செய்வதற்கு உபயதாரருக்கு ஆணை வழங்கி, நான்கு மாதங்களுக்குள் முடித்து தருமாறு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவிலில், பக்தர் ஒருவர், உபயமாக தங்கத்தேர் செய்வதற்கு ஏதுவாக, ஒரு மரத்தேர் செய்து தருவதாக அனுமதி கோரினார்.இதற்கு, 25 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, 9 அடி நீளம், 9 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட மரத்தேர் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இப்பணிகள், திருக்கோவில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்;மரத்தேரை, தங்கத்தேராக மாற்றுவதற்கு வசதியாக, மரத்தேர் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள், நான்கு மாதத்திற்குள் முடித்து தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. மரத்தேர் வந்த பின், தங்கத்தேர் உருவாக்குவதற்கு, ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி பெற்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.