திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வைகுண்ட ஏகாதசி விழா: ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 6ம் தேதி, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து, அறநிலையத்துறை, சென்னை மண்டல இணை கமிஷனர் ஹரிபிரியா கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசிக்கு, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவிலுக்கு சென்று, வரும் வழித்தடங்கள் குறித்த வரைபடம், மாட வீதிகளில் வைக்கப்படும். எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட உள்ளன.மூத்த குடிமக்களுக்கு, முன் கோபுர வாசல் வழியாக வர, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், காலை, 8:00 முதல், 10:00 மணி வரை, மூத்த குடிமக்கள் காலை, 10:00 முதல், 11:00 மணி வரை, உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், 11:00 முதல் இரவு, 10:00 மணி வரை தெற்கு மாட வீதி வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில், நுாற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாற்று உடையில், ஏராளமான போலீசார், பக்தர்களுடன் உலா வருவர். கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன; அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.மாநகராட்சி, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றின் வாயிலாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டண சீட்டு, 4ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, ஒரு நபருக்கு ஒரு சீட்டு வீதம் விற்பனை செய்யப்படும். ஆதார் அட்டை நகல் அவசியம்.வைகுண்ட ஏகாதசி அன்று, தெற்கு மாட வீதி மற்றும் தேரடி தெருவில், தன்னார்வ தொண்டர்கள் வாயிலாக, அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சி நிரல்:
* அதிகாலை, 2:30 மணிக்கு, 500 ரூபாய் டிக்கெட், பேட்ஜ் உள்ளவர்கள், கோவிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்
* அதிகாலை, 2:30 மணி முதல், 2:45 மணி வரை, உற்சவருக்கு மகா மண்டபத்தில் அலங்காரம்
* அதிகாலை, 2:45 மணி முதல், 4:00 மணி வரை, உற்சவர் வைர அங்கி சேவை
* அதிகாலை, 4:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு துவக்கம்
* அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தல்
* அதிகாலை, 4:30 மணி முதல், 5:00 மணி வரை, வேத திவ்யப் பிரபந்தம் துவங்குதல்
* காலை, 5:10 மணி முதல், 8:45 மணி வரை பக்தி உலா, புண்ணிய கோடி விமானத்தில், வைர அங்கியுடன், உற்சவர் சேவை சாதித்தல்
* காலை, 6:00 மணி முதல் இரவு, 12:00 மணி வரை, பக்தர்கள் சிறப்பு கட்டண தரிசனம், 200 ரூபாயில் பின்புற வாசல் வழியாகவும், தர்ம தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகவும் செல்லலாம்
* காலை, 8:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, மேற்கு கோபுர வாசல் வழியாக, கட்டணமின்றி பரமபத வாசலைக் கடந்து, உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் சேவித்து, கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
* இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் அலங்கார திருமஞ்சனம்; நள்ளிரவு, 12:00 மணிக்கு நம்மாழ்வாருடன் திருவீதி உலா.