திருமலையில் வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதி
திருப்பதி: திருமலையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று காலை தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை தேவஸ்தானம் இது குறித்து தெரிவித்திருப்பதாவது: திருமலையில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களை முன்னிட்டு ஜன. 5 முதல் 7 வரை நன்கொடையாளர்கள் தரிசனம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் அறைகள்; மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் இலவச முதன்மை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்யதரிசனம் டோக்கன் நேர ஒதுக்கீடு டோக்கன் அங்கபிரதிட்சிண டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படாது. ஜன. 6 மார்கழி மாத கைங்கரியத்திற்கு பின் அதிகாலை 2:00 மணி முதல் வைகுண்ட வாசல் தரிசனம் துவங்கும். அன்று காலை 5:00 மணிமுதல் தர்ம தரிசனம் துவங்கும். ஜன. 7 நள்ளிரவு வரை வைகுண்ட வாசலில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் வசதிக்காக ஜன. 6ம் தேதி 24 மணிநேரமும் மலைப்பாதை திறந்து வைக்கப்படும். ஜன. 7ம் தேதி இரவு திமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைபாதை மட்டும் திறந்து வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.