மகரவிளக்கு பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸ்: தேவசம்போர்டு முடிவு
சபரிமலை: பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மகரவிளக்கு காலத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசை நியமிக்க தேவசம்போர்டு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேவசம்போர்டு தலைவர் வாசு தலைமையில் மகரஜோதி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சபரிமலை நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மகரவிளக்கு நெருங்கும் போது அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் அதிமாக கூடும் பாண்டி தாவளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என சபரிமலை போலீஸ் தனி அதிகாரி சுஜித்தாஸ் கூறினார்.
வனத்துறை சார்பில் வனவிலங்குகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வனத்துறை ஊழியர்களின் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காடுகளுக்குள் வழி தவறும் பக்தர்களை மீட்டு உரிய இடத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் கூடுதல் விளக்குகள் பொருத்தப்படும் என்று மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான நவீன மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நடந்த சோதனையில் 574 வழக்குகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்ட இறுதியில் பேசிய தேவசம்போர்டு தலைவர் வாசு கூட்டம் அதிகமாவதை கருத்தில் கொண்டு அனைத்துத்துறைகளும் தங்கள் செயல்பாட்டை மேலும் துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.