உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 200 ஆண்டு பாரம்பரியம்: வெண்சேலை உடுத்தி பொங்கல் வழிபாடு

200 ஆண்டு பாரம்பரியம்: வெண்சேலை உடுத்தி பொங்கல் வழிபாடு

சிவகங்கை: சிவகங்கை அருகே வலையராதினிபட்டியில் 200 ஆண்டு பாரம்பரியமாக நல்ல மழை, விளைச்சல், நாடு செழிக்க வேண்டி தொழுவத்தின் முன் வெண் சேலை உடுத்தி பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்தினர். இக்கிராமத்தில் தை பொங்கல் முடிந்த மறுநாள் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சமூகத்தினர் 200 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் மாட்டு தொழுவத்தின் முன் பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டும் பாரம்பரிய விழாவிற்காக மார்கழியில் இருந்தே கிராமத்தினர் விரதத்தை துவக்கினர். மார்கழி முதல் அசைவம், மது அருந்தும் பழக்கம் இருக்காது. அதை தொடர்ந்து தை பிறப்பிற்கு 7 நாட்களுக்கு முன் காட்டு சோதனை (வேட்டை)க்கு சென்று, சுவாமியிடம் அனுமதி பெற்று, பிடிமண் எடுத்து வந்து கோயிலில் வைப்பார்கள். அன்று முதல் தொழுவத்தின் முன் வெண்சேலை உடுத்தி பொங்கல் வைப்பதாக வேண்டி கொள்ளும் பெண்கள், உடலில் இருக்கும் அணிகலன்களை கழற்றி வைப்பர். நேற்று பெருமாள், பொன்னழகு அம்மன் கோயிலில் இருந்து வெண் சேலை உடுத்திய பெண்கள், மண் பானைகளுடன் ஊர்வலமாக தொழுவிற்கு சென்றனர். அதற்கு முன் மண்பானையில் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையல் வைத்து வழிபட்டனர். நல்ல மழை, விளைச்சல், நாடு செழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பாரம்பரியமாக இக்கிராமத்தினர் பொங்கல் விழா எடுத்தனர்.

200 ஆண்டு பாரம்பரிய விழா: வலையராதினிபட்டி ஏ.போஸ் கூறியதாவது: எங்கள் சமூகத்தினர்  விவசாயம், அதற்கு உறுதுணை புரிந்த கால்நடைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாட்டு தொழுவத்தின் முன் மண் பானையில் வெண் சேலை அணிந்த பெண்கள் பொங்கல் வைத்தனர்.  பின்னர் குழந்தை வரம் வேண்டி கரும்பு தொட்டி கட்டியவர்கள் நேர்த்தி செலுத்தினர்.  நாடு, விவசாயம் செழிக்க வேண்டி  பாரம்பரியமாக இப்பொங்கல் விழா நடத்துகிறோம். இந்த விழாவில் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சாமியை வழிபட்டு பிரசாதம் பெற்று செல்வர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !