ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்
ADDED :2134 days ago
ராமேஸ்வரம்: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் செய்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.ஜன.15ல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதியை தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று ஏராளமான வாகனங்களில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்தனர். பின் பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி பிறகு சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.பின் தனுஷ்கோடியில் சேதமடைந்த சர்ச், கோயில் மற்றும் அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்தனர். நேற்று காலை முதல் கோயில் சன்னதி தெரு, ரதவீதி, பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.மேலும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் இருபுறமும் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் பாதித்தனர்.