கோயில் விழாவில் குழந்தைகள் ஏலம்
செம்பட்டி: ஏ.வெள்ளோடு அந்தோணியார் ஆலய விழாவில் பாரம்பரிய முறைப்படி குழந்தைகள் ஏலம் நடந்தது. திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இரண்டு நாட்களாக நடக்கிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு திருப்பலி, திருவிழா கூட்டுப்பிரார்த்தனை, புனிதர்களின் ரத ஊர்வலம், தொடர் அன்னதானம் நடந்தது.
நேற்று முக்கிய நிகழ்வாக குழந்தைகள் ஏலம் நடந்தது. பங்குத்தந்தை கபிரியேல் ஆரோக்கியசாமி, தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தை ஆனந்தராஜ், நிர்வாகிகள் சாலமன், ஆல்பர்ட், அந்தோணி, ராயப்பன் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய முறைப்படி, 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏலம் விடப்பட்டனர். இப்பகுதியினர் கூறுகையில்,‘குழந்தை வரம், மகப்பேறு கால பிரச்னைகளின் போது, குழந்தைகள் ஆலயத்திற்கு நேர்ந்து விடப்படுவர். பெற்றோர் வளர்த்த போதும், திருவிழாவில் கோயில் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவர். தலா ரூ.100 ல் துவங்கி ரூ.2 ஆயிரம் வரை விலைக்கு கேட்பர். இறுதியாக நிர்ணய தொகையை விட ஒரு ரூபாய் கூடுதலாக பெற்றோர் ஏலம் எடுப்பர். இத்தொகை ஆலய காணிக்கையில் சேர்க்கப்படும்’, என்றனர்.