மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நாளை (பிப்., 8 ல்) கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். பக்தர்கள் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும்.
இவ்விழாவை முன்னிட்டு ஜன., 28 முதல் பிப்.,8 வரை பஞ்ச மூர்த்திகளுடன் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் காலை, மாலை இருவேளை திருவீதி உலா நடந்தது. நாளை தெப்ப உற்ஸவம் முடிந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இரவு கோயிலுக்கு வந்து சேரும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். பக்தர்கள் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் காலை 7:00 முதல் பகல் 12:30 மணி, பகல் 3:00 முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். கோயில், உபயதாரர் சார்பில் தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் நடக்காது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.