கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2)-சொத்து வாங்குவீங்க! சுகமாய் இருப்பீங்க! 75/100
தகுந்த திட்டத்துடன் செயல்புரிந்து வெற்றிபெறும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் குருபகவான் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். கடந்தகாலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இப்போதைய அமர்வு உங்கள் மாற்றத்தை உருவாக்கும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசியையும் ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், தைரியம், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம் ஆகிய ஸ்தானங்களையும் பார்க்கிறார். இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பது ஜோதிட சாஸ்திர மொழி. தப்பு செய்து விட்டு, ஓடிப்போனாலும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று இதற்கு பொருள் சொல்வார்கள். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி காலம் தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். புத்திரர்கள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, அச்சகம் நடத்துவோர், ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, காகிதம், கட்டுமானப்பொருள், தோல், கண்ணாடிப்பொருள் உற்பத்தி செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட லாபம் குறைவாக இருக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். தொழிலதிபர் சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருள், கண்ணாடி, பர்னிச்சர், ஸ்டேஷனரி, காகிதம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்சார, மின்னணு சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். பிற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இவர்களை விட குறைந்த லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அன்றாடப் பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள்.
பெண்கள்:பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், வங்கியியல், வணிகவியல், கலை, அறிவியல் மாணவர்கள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் பெறுவர். ஆசிரியர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். மற்ற துறை மாணவர்களும் தரத்தேர்ச்சி பெறுவர். ஆரம்ப, நடுநிலை மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாநில ராங்க் பெற முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். புத்திரர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.
விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறப்பாக நடக்கும். மகசூல் உயர்ந்து கூடுதல் லாபம் பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பிலும் பலன் உண்டு.
பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தைரியம், மங்கல நிகழ்வு உண்டாகும்.
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம்
பரிகாரப்பாடல்: பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகருளானே!
வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை, உங்கள் ராசிநாதன் புதனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால், மனதில் புத்துணர்வும், செயல்களில் நேர்த்தியும் ஏற்படும். பணவரவு பெற கிடைக்கிற வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தும், புதியவர்களின் நட்பும் கிடைக்கும். புத்திரர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்கள், எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்கப் பெறுவர். உடல்நலம் சீராக இருக்கும். பூர்வ சொத்தில் திருப்திகர பணவரவும், கூடுதல் சொத்து சேர்க்கையும் உண்டு. கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவர். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும்.