உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் எடப்பாடி பர்வதராஜகுல மக்கள்: மலையில் தங்கி வழிபாடு

பழநியில் எடப்பாடி பர்வதராஜகுல மக்கள்: மலையில் தங்கி வழிபாடு

பழநி: பழநி தைப்பூச விழாவை தொடர்ந்து, எடப்பாடி பர்வதராஜ குல சமூகத்தினர் நேற்று காவடி எடுத்து வந்து மலைக்கோயிலில் இரவில் தங்கி வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பர்வதராஜ குலத்தினர் பல ஆண்டுகால பாரம்பரியமாக காவடிகள் எடுத்து பழநி வருவது வழக்கம். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர், ஆட்டம் பாட்டத்துடன் தாராபுரம் வழியாக பாதயாத்திரையாக பழநி மலை கோயிலுக்கு வருவர். இந்த ஆண்டும் தைப்பூசத்தையொட்டி நேற்று பழநி கோயிலுக்கு காவடிகளுடன் வந்தனர். வரும் வழியில் மானுார் சண்முகநதியில் நீராடினர். பின்னர் சிறப்பு பூஜை நடத்தி பழநிக்கு கிளம்பினர். அவர்களை பெரியநாயகியம்மன் கோயில் அருகே யானை கஸ்துாரி வரவேற்றது.காவடிகள் செலுத்தி வழிபாடு

பின்னர் 4 ரதவீதிகளில் யானை முன்னால் செல்ல, பர்வதராஜ குலத்தினர் மலைக்கோயிலுக்கு சென்றனர். படிப்பாதையில் படிபூஜை செய்தனர். கோயில் வெளிப்பிரகாரத்தில் 100 கிலோ பூக்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இளநீர் காவடி, பால்காவடி, புஷ்பகாவடி, சர்க்கரை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு முழுவதும் மலைமேல் தங்கியவர்கள், சாயராட்சை கால பூஜை, தங்கரதம், ராக்கால பூஜை தரிசனம் செய்தனர். இன்று காலை தரிசனம் முடித்து மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்குவர். பழநியில் இன்று அன்னதானம் செய்வர். நாளை (பிப்., 16) எடப்பாடிக்கு கிளம்புகின்றனர். பழநி மலைக்கோயிலில் பர்வதராஜகுல சமுதாய மக்கள் மட்டுமே இரவு தங்கி வழிபட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !