அங்காளம்மன் கோவிலில் குண்டம் விழா: பக்தர்கள் பரவசம்
பல்லடம்: பல்லடம் அங்காளம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், ஓம்சக்தி பராசக்தி எனும் கோசத்துடன், பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
பல்லடத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், 45வது குண்டம் திருவிழா நடந்தது. பிப்.,20 அன்று, விக்னேஸ்வர பூஜை, கிராமசாந்தி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 7.00 மணிக்கு, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சிறுவர் சிறுமியர், பெண்கள், மற்றும் குழந்தையுடன் வந்த தாய்மார்கள் என, வயது வேறுபாடு இன்றி, ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தை முன்னிட்டு, அம்மனை குளிர்விக்கும் வகையில், வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம், 12.30க்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழா கமிட்டியின் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.