திருநாங்கூர் வண்புருஷோத்தம பெருமாள் தேர் வெள்ளோட்டம்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருநாங்கூர், வண்புருஷோத்தம பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் இன்று(மார்.,5) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 32-ஆவது தலமான அருள்மிகு வண்புருஷோத்தம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அருள்மிகு புருஷோத்தம நாயகி தாயார் சமேத வண்புருஷோத்தம பெருமாள் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு 34 அடி உயரத்தில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. திருத்தேரின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. காலை 9:30 மணிக்கு பூர்ணாகுதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தாயாருடன், சுவாமி தேரில் எழுந்தருள, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு பட்டாச்சாரியார்கள் ரத பிரதிஷ்டை செய்துவைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கிருஷ்ணமாச்சாரி, கண்ணன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் செய்திருந்தனர். திருத்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு திருவெண்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.