உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் துப்பாக்கி வீரன் நடுகற்கள்

ராஜபாளையத்தில் துப்பாக்கி வீரன் நடுகற்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே  சேத்துாரில் துப்பாக்கியுடன் உள்ள வீரனின் இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை உதவிப் பேராசிரியருமான  போ. கந்தசாமி தெரிவித்துள்ளார். அவர்  கூறியதாவது: சேத்துார் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டபோது   நடுகல்லில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையால் தரையில் ஊன்றியப்படி  நாட்டுத்துப்பாக்கியை பிடித்தப்படியும் வலது கையை கீழே தொங்க விட்ட நிலையிலும், மார்பின் இடைப்பகுதியில் பூணூல் போன்ற கயிற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பையை மாட்டி உள்ளது போன்று காணப்படுகிறது.

வீரனின் தலைக்கொண்டை அலங்காரத்துடனும்  இரண்டு நீண்ட காதணிகள் அணிந்துள்ள நிலையில்  கைத்தண்டை, கைக்காப்பு, காற்சிலம்பு மற்றும் இடை ஆடை போன்றவையுடன் மிக நேர்த்தியாக இக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதில்  வீரனின் முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.  மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி  விழாவின் போது இந்நடுகல்லை மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு சிறப்பு பூஜையும் செய்கின்றனர். வழிபாட்டு நிலையில் உள்ள இந்நடுகல் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சேத்துார் காமராஜர் நகர் அருகே ரோட்டோரத்தில் மற்றொரு நடுகல் மேற்கூறிய நடுகல்லை போன்றே வீரன் நின்றவாறுநாட்டுத்துப்பாக்கியை இடுப்பு  கயிற்றில் கட்டிய நிலையிலும்  இடது கையால் சற்று உயர தூக்கி பிடித்தப்படி  கல்   உள்ளது.  காதணிகள், தலைக் கொண்டை, கைக்காப்பு, கைத்தண்டை, காற்சிலம்பு மற்றும் இடை ஆடையில் குஞ்சம் வைத்தப்படி  செதுக்கப்பட்டுள்ளன. இந்நடுகல்லைகருப்பசாமி  பெயரில் குலதெய்வமாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதை சிவகாசி, விருதுநகர், தேனி , போடி பகுதி மக்கள் வழிபடுகின்றனர். இரண்டு நடுகற்களிலும் வீரன் நாட்டு  துப்பாக்கியுடன் காணப்படுவதால் விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை காப்பதற்காகவும், காட்டு விலங்குகளைவேட்டையாடி வீரம் புரிந்த நிகழ்வுகளை இந்நடுகல் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகிறது.  இவற்றின் உருவ அமைப்பை  கொண்டு கி.பி. 17 ம்நுாற்றாண்டின் பிற்பகுதியை சார்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்  சமூகத்தில் வீரனை முன்னிறுத்தி மரியாதை செய்யக்கூடிய பழக்கம் நடுகல் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த துப்பாக்கி வீரன் நடுகற்களே சான்றாக அமைகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !