உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அகண்ட தீபம் அணைந்ததாக வதந்தி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அகண்ட தீபம் அணைந்ததாக வதந்தி

 திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் எரிந்து வரும் அகண்ட தீபம் அணையவில்லை என, திருமலை ஜீயர்கள் தெரிவித்துள்ளனர். திருமலை மடத்தின், பெரிய ஜீயர் சடகோப ராமானுஜர், சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜர் இருவரும், திருப்பதியில் நேற்று அளித்த பேட்டி:திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏற்றப்பட்ட அகண்ட தீபம் அணைந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்ம தீபம், அகண்ட தீபம் இரண்டும் ஏற்றப்பட்டு வருகின்றன.காலை சுப்ரபாத சேவையின் போது ஏற்றப்படும் இந்த இரு தீபங்களும், இரவு ஏகாந்த சேவைக்கு பின் குளிர்விக்கப்பட்டு, நடை சாற்றப்படுகிறது. இதுவே, கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. திருமலை ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் குறையில்லாமல் நடத்தவே, வைணவ குரு ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டது.  திருமலை மடம். இங்குள்ள ஜீயர்களின் பணி, ஏழுமலையான் கோயிலில் நடக்கும் கைங்கரியங்களில் குறைவு ஏற்படாமல் கவனித்து கொள்வது மட்டுமே. ஏழுமலையான் கோவிலில், அதிகாலை சுப்ரபாதம் முதல், இரவு ஏகாந்த சேவை வரை, அனைத்து சேவைகளும் ஒரு தடங்கலும் இல்லாமல், ஆகம விதிப்படி, தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை கடைபிடிக்கும் நோக்கோடு, பக்தர்களுக்கு மட்டும், ஏழுமலையான் தரிசனம் மறுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கைங்கரியங்களும் வழக்கம் போல் பின்பற்றப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !