கண்ணகி கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகள்
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் மே 7ல் ஆகமவிதிப்படி சித்ராபவுர்ணமி பூஜைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்தனர்.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக- கேரள எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஆண்டு தோறும் சித்ராபவுர்ணமியன்று இருமாநில பக்தர்கள் இணைந்து விழா கொண்டாடுவர். ஊரடங்கால் இந்தாண்டு கோயிலில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டு ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்த தமிழக அரசுஅனுமதித்துள்ளது. ஆனால் மங்கலதேவி கண்ணகி கோயில் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேஷ் கூறும்போது, ஊரடங்கால் மே 7ல் கண்ணகி கோயிலில் நடக்க இருந்த சித்ராபவுர்ணமி விழாவை நிறுத்தி வைத்து அன்றைய தினம் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஆகமவிதிப்படி பூஜைகள்மட்டும் செய்வது என தீர்மானித்துள்ளோம். இதற்கு தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் அனுமதி வழங்க வேண்டும். கோயில் வளாகத்தில் மண்டியுள்ள புதரை அகற்ற வேண்டும். பளியன்குடியில் இருந்து கோயில்வரை செல்லும் தமிழக வனப்பாதை, குமுளியில் இருந்து செல்லும் ஜீப் பாதையை சீரமைக்க வேண்டும், என்றார்.