உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் அன்னதான திட்டம் நிறுத்தம்

கோவில்களில் அன்னதான திட்டம் நிறுத்தம்

அவிநாசி: கோவில்களில், அன்னதான திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் நிர்வாகத்திடம் இருந்த உணவு தயாரிப்புக்கு தேவையான பொருட்கள், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தினசரி, 50 முதல், 100 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவில்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; வழக்கமான பூஜை மட்டுமே நடக்கிறது. பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில்லை. அன்னதானம் வழங்கும் திட்டமும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்னதானத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், முன்கூட்டியே கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அப்பொருட்களை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர், தங்கள் பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் வசம் ஒப்படைக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. வருவாய்த்துறையினர், தன்னார்வலர்கள் மூலம், அப்பொருட்களை வழங்கி, உணவு சமைத்து, ஏழை, எளியோருக்கு வழங்கி வருகின்றனர். சில இடங்களில், இப்பணியில் தொய்வு தென்படுகிறது. நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கத்தினர், தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்றோர், வீடில்லாமல் ரோட்டோரம் வசிப்போருக்கு, நன்கொடை மூலம் மளிகை பொருட்கள் பெற்று, உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்தினருடன் ஒருங்கிணைந்து, வருவாய்த்துறையினர் செயல்படும் பட்சத்தில், தங்களிடம் உள்ள மளிகைப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, ஏழைகளின் பசி தீர்க்க முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !