உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை ரத்து

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை ரத்து

மயிலாடுதுறை: கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை வருவது ரத்தானது.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப்பாடல் பெற்ற அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வ முத்துக்குமார சுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள்

சித்திரை இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை அன்று வந்து கோவில் தீர்த்த குளத்தில் நீராடி, அருள்மிகு தையல்நாயகி அம்பாளை குலதெய்வமாகவும், தங்களது ஊர் பெண்ணாகவும் கொண்டாடி சீர் வரிசையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். நகரத்தார் வருகையால் சித்திரை 2ஆம் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டதால் நகரத்தாரின் பாதயாத்திரை ரத்தானது. இதனால் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான நேற்று வைதீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !