உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி நேர்த்திக்கடன் பணத்தை வழங்கிய மூதாட்டி!

பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி நேர்த்திக்கடன் பணத்தை வழங்கிய மூதாட்டி!

போத்தனுார்: நேர்த்திக்கடன் செலுத்த சேமித்து வைத்திருந்த, 1400 ரூபாயை ஏழை எளியோருக்கு உதவ வழங்கினார், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி.
ஊரடங்கு அமலில் உள்ளதால், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனத்தார், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு, மளிகை, காய்கறி பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர். சுந்தராபுரம் அருகே வசிக்கும் முத்துகணேஷ், ஆர்.எஸ்.எஸ்.,ன் சேவா பாரதி மூலம், சுந்தராபுரம், பிள்ளையார்புரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உணவு வினியோகித்தார். இதுகுறித்து அப்பகுதியிலுள்ள மேல்குடியிருப்பு, ஆதிசக்தி நகரில் வசிக்கும் பாக்கியம்மாள், 63 எனும் மூதாட்டி கேள்விப்பட்டார். திருப்பதி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த, சேமித்து வைத்திருந்த, 1,400 ரூபாயை முத்துகணேஷிடம் வழங்கினார்.

முத்துகணேஷ் கூறுகையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, தான் குணமானால் திருப்பதிக்கு வருவதாக வேண்டி, காணிக்கை சேர்த்து வந்துள்ளார். தற்போதைய சூழலில் பசியால் வாடுவோருக்கு உதவுவதே மேல் எனக்கூறி, ஐந்து ரூபாய் நாணயங்களாக, 1,400 ரூபாய் வழங்கினார். இதில் வாங்கப்பட்ட பொருட்களை, தேவைப்பட்டவர்களுக்கு வழங்கினோம், என்றார். இம்மூதாட்டியின் மகன் பெயின்டர் தொழில் செய்கிறார். தற்போது அவருக்கும் வேலை கிடையாது. இருப்பினும் மூதாட்டி, பிறருக்கு உதவியது அனைவர் மனதையும் உருக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !