ராமேஸ்வரத்தில் முடங்கிய வடமாநில பக்தர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
ADDED :1980 days ago
ராமேஸ்வரம் : கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரத்தில் முடங்கிய வட மாநில பக்தர்கள், தொழிலாளர்கள் 230 பேர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊரடங்கால், ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்திற்கு வந்த உ.பி., பீகார், ராஜஸ்தானை சேர்ந்த 202 பக்தர்களும், ராமேஸ்வரத்தில் லாட்ஜ், ஓட்டல், கட்டுமான பணியில் ஈடுபட்ட 700 வட மாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதன்படி நேற்று 55 பேர் அரசு அனுமதியுடன் ராஜஸ்தான், பீகார், ஆந்திராவுக்கு வாகனத்தில் சென்றனர். மேலும் 175 பேர் இரவில் 6 பஸ்சில் உ.பி., பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கும் அரசு அனுமதி கிடைத்ததும், வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுவர் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.