ஈரோடு கோவில்களில் மீண்டும் அன்னதானம் துவக்கம்
ஈரோடு: ஈரோடு, கோவில்களில் அன்னதான திட்டம் மீண்டும் துவங்கியது. ஈரோட்டில் திண்டல், கொங்கலம்மன், பெரியமாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அன்னதானம் திட்டம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கால் கோவில்கள் அடைக்கப்பட்டன. அதனால், அன்றாடம் நடக்கும் அன்னதானமும் நிறுத்தப்பட்டது. அந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த, மளிகை பொருட்கள், அம்மா உணவகங்களுக்கு மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கோவில்களில் அன்னதானம் வழங்கலாம் என, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தர விட்டுள்ளது. அதன்படி ஈரோடு பெரியமாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று முன்தினம் முதல், கலவை சாதம் பார்சலாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கோவில்கள் திறக்கும் வரை பார்சலிலும், அதற்கு பின் இலை போட்டும் அன்னதானம் வழங்கப்படும் என, கோவில் பணியாளர்கள் கூறினர்.