நுாறாண்டு காலம் வாழ்க!
ராமானுஜரின் வாழ்வில் நடந்த சம்பவம் இது.
ஒருநாள் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை தரிசிக்க சென்றார் ராமானுஜர், அப்போது தைலக்காப்பில் துணியை போர்த்தியபடி படுத்திருந்தார் பெருமாள். சுவாமிக்கு உடம்புக்கு முடியவில்லையோ எனத் தோன்றியது.
‘‘ஏன் தேவரீர் திருமேனி பாங்கு இல்லையோ?’’எனக் கேட்டார் ராமானுஜர்.
‘‘ஆமாம். கொஞ்சம் சரியில்ல தான்’’ என்றார் பெருமாள்.
‘‘ஏன் இப்படி ஆனது?’’ எனக் கேட்டார் ராமானுஜர்.
‘‘தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்தனர். கொடுத்ததை நாமும் சாப்பிட்டோம். அதனால் கொஞ்சம் ஒத்துக்காமல் போகவே ஜுரம் வந்து விட்டது’’ என்றார் பெருமாள்.
ஸ்ரீரங்கத்தில் ஆட்சி நடத்தும் பெருமாளுக்கு ராஜ வைத்தியர் இல்லை என்பதை ராமானுஜருக்கு உணர்த்தவே இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தினார் பெருமாள்.
‘பெருமாளுக்கு ஜுரம் என்பதை அறிந்து ராமானுஜர் வருந்தினார்.
‘‘மாமிச சரீரமாக இருந்தால் வைத்தியரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம். உங்களுடைய திவ்ய சரீரத்துக்கு எந்த வைத்தியரை கொண்டு வந்து காட்டுவேன்?’’ என்று சொல்லி அழுதார்.
‘‘நம் சன்னதியில் தன்வந்திரியை பிரதிஷ்டை செய்யும். அவர் வைத்தியம் பார்த்துக் கொள்வார்’’ எனப் பதிலளித்தார் பெருமாள்.
‘அன்று முதல் பெரிய பெருமாளுக்கு என்ன பதார்த்தம் செய்தாலும், அது பெரிய பெருமாளுக்கு உகந்ததா?’ என தன்வந்திரியிடம் அனுமதி பெற்ற பின்னரே நிவேதனம் செய்யத் தொடங்கினார்.
இப்படி ஒரு முக்கியத்துவம் ஸ்ரீரங்கம் கோயிலில் தன்வந்திரிக்கு அளிக்கப்பட்டது.
தன்வந்திரியின் பெருமையை நிலை நாட்டவும், ராமானுஜரின் பக்தியை உலகிற்கு தெரியப்படுத்தவும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் செய்த விளையாடல் இது. இப்படி வைத்தியராக இருக்கும் தன்வந்திரி பகவானை நாம் வழிபட்டால் நுாறாண்டு காலம் நோயின்றி வாழலாம்.