கோவிலுக்குரிய ரூ.3 கோடி நிலம் ஆக்கிரமிப்பா ? அதிகாரிகள் அளவீடு
சேலம்: மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் நிலத்தை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவால் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யப்பட்டது.
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 3000 சதுரடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அளவீடு செய்து மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பின் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாவட்ட நிர்வாகம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை வருவாய் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்தபோது கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது உறுதியானது. அத்துடன் ஆக்கிரமிப்பாளர் விபரங்களை சேகரித்தனர். அதை அறிக்கையாக தயாரித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.