ரூ.3.5 லட்சம் நோட்டு அலங்காரத்தில் அம்மன்
பூந்தமல்லி: ஆடி பெருக்கையொட்டி, 3.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆடி மாதம், அம்மன் கோவில்களில், தீ மிதி விழா, கூழ் ஊற்றுவது உள்ளிட்ட விசேஷங்கள் நடப்பது வழக்கம்.தற்போது, கொரோனா ஊரடங்கால், நான்கு மாதங்களாக கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளன.இருந்தாலும், குறைந்தளவில் பக்தர்களை வைத்து, ஆங்காங்கே சில அம்மன் கோவில்களில், திருவிழாக்கள் நடந்து வருகின்றன.அந்த வகையில், பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் உள்ள, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில், குறைந்தளவு பக்தர்களுடன் திருவிழா நடத்தப்பட்டது.ஆடி பெருக்கையொட்டி, நேற்று, 50, 100, 500 என, புதிய ரூபாய் நோட்டுகளால், 3.50 லட்சம் ரூபாய் அளவிற்கு, கோவில் முகப்பு துவங்கி, கருவறையில் உள்ள, அம்மன் சிலையை சுற்றிலும், அலங்கரிக்கப்பட்டிருந்தது.இதை அப்பகுதி, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.