சதுர்த்தி விழாவுக்கு பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை
புதுச்சேரி : புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என கலெக்டர் அருண் கூறி உள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர், தேசிய நிர்வாகக் குழு தலைவர், மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.தனியார் கோவில்களுக்கு முன்பு ஷாமியானா பந்தல் அமைப்பது மற்றும் சிலைகளை வைத்திருப்பதும், கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதால் கோவில்களில் பிரசாதம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கலாசார கலை நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பொதுப்பணித்துறை, நகராட்சிகள், போலீஸ் அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.