கொரோனா ஊரடங்கு முடிந்த பின் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு
திருப்புத்துார்: கொரோனா தடுப்பு ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் கோயில்கள் திறக்க அரசு அனுமதித்த பின் பிள்ளையார்பட்டியில் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் சதுர்த்திப் விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை அடுத்து கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் சம்பிரதாயமாக விழா நடைபெற்று வருகிறது.நான்காவது நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும், தங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும் அருள்பாலித்தனர்.
விழா குறித்து அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்பன் மற்றும் குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் (எ) செந்தில் கூறியது: சதுர்த்திப் பெருவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் பல ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. இந்த நிகழ்வு கற்பகவிநாயகர் கோயில் அலுவலக யுடியூப் சேனலில் (https://www.youtube.com/channel /UC8u VJuIo7JFCsj WoWSHej6w/liveல் காலை 9:30 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்த ஆண்டு தேரோட்டம்,சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறாது. பக்தர்கள் தரிசிக்க வசதியாக கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும், என்றனர்.