உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி வழக்கு

விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி வழக்கு

 சென்னை; சதுர்த்தியை முன்னிட்டு, தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைவினை காதிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முருகன் தாக்கல் செய்த மனு:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தெருக்களில் சிலைகள் வைக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தெருக்களில் வைக்கப்படும் சிலைகள் முன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் கூடுவர். சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் தான், அதிக கூட்டம் கூடும்.வங்கி, தனிநபர்களிடம் இருந்து கடன் பெற்று, விநாயகர் சிலைகளை உருவாக்கி உள்ளோம். சிலைகளை விற்பனை செய்தால் தான், கடனை திருப்பி செலுத்த முடியும். பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதிக்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான சிலைகள் வீணாகி விடும்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, இயற்கை முறையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிலைகள் அதிக நாட்கள் தாங்காது. அடுத்த ஆண்டு வரை பராமரிக்கவும் முடியாது. ரம்ஜான் மற்றும் துாத்துக்குடியில் பனிமய மாதா கோவில் திருவிழாவுக்கு அனுமதித்தது போல, விநாயகர் சதுர்த்தி விழாவும் அனுமதிக்கப்படும் என, நம்பினோம். எனவே, தெருக்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை வைப்பதாக, ஹிந்து முன்னணி தலைவர் அறிவித்துள்ளார். அரசின் தடை உத்தரவை மதிக்காதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை துாண்டிவிடும் இந்த செயலுக்காக, நடவடிக்கை எடுக்க கோரி, அரசுக்கு மனு அனுப்பி உள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜைகள் நடத்தவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும், அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !