பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு
குளித்தலை: பிரதோஷத்தையொட்டி, குளித்தலை, தோகைமலை பகுதியில் சிவாலயங்களில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. குளித்தலை, கடம்பவனேஸவரர் கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி, தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல், மேட்டுமருதூர் ஆரா அமுதீஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில், அய்யர்மலை ரெத்தினிகிரீஸ்வரர் கோவில், கழுகூர் கஸ்பா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல், ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவில், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சின்னரெட்டியப்பட்டி மலைக்கோவில், ஆவுடையார் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.