மல்லேஸ்வர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டி ஸ்ரீமல்லேஸ்வர் மலைக்குன்று கோவிலில், அமாவாசை வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொண்டம்பட்டி ஸ்ரீமல்லேஸ்வர் மலைக்குன்று கோவிலில் நேற்று முன் தினம், மாலை, 6:30 மணிக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், திருநீறு அபிேஷக பூஜை நடந்தது. மல்லேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கொண்டம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி மல்லேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையில் தளர்வு அறிவிக்கப்பட்டதால், கிராம கோவிலில் நடந்த அமாவாசை வழிபாட்டில், பக்தர்கள் பங்கேற்றனர்.