உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் மொட்டை, யாகம் நடத்திய தி.மு.க., பகுத்தறிவு பகலவன்கள்

கோவிலில் மொட்டை, யாகம் நடத்திய தி.மு.க., பகுத்தறிவு பகலவன்கள்

கரூர்: கொரோனா தொற்றில் இருந்து, செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி, தி.மு.க.,வினர் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி, யாக பூஜை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், அரவக்குறிச்சி, எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைய வேண்டி, அ.தி.மு.க., வினர் வழிபாடுகளை மிஞ்சும் அளவிற்கு, தி.மு.க.,வினர் கோவில்களில் வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

கரூர் தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,விற்கு வந்ததால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், கோவில்களில் வழிபாடு நடத்துவது ஆச்சரியமில்லை. ஆனால், தி.மு.க.,வினரும் இந்த வழிபாடுகளில் இணைந்துள்ளனர். குறிப்பாக, கரூர் மாவட்ட, கருணாநிதி பகுத்தறிவு பாசறை அமைப்பாளராக இருந்த வாசு, செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவிலில், முடி காணிக்கை செலுத்தியுள்ளார். இதை, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், குளித்தலை எம்.எல்.ஏ., ராமர் ஏற்பாட்டில், பாதிரிப்பட்டி மாரியம்மன் கோவில், சிவன் கோவிலில் சிறப்பு பூஜை, ஆத்தூரில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கற்பகவிநாயகர் கோவில் சிறப்பு யாகம் என, தி.மு.க.,வினர் மனமுருகி வேண்டி வருகின்றனர்.

வழக்கமாக, கட்சி தலைமைக்கு அஞ்சி, கடவுள் வழிபாடு நிகழ்ச்சிகளில், தி.மு.க.,வினர் வெளிப்படையாக பங்கேற்க மாட்டார்கள். தற்போது, தேர்தல் நேரம் என்பதால், தி.முக.,வினர், ஆன்மிக அரசியல் பக்கம் சாய்ந்துள்ளனர். இதை, தலைமையும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !