உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுறை நாதேசுவரர் கோவில் நிதி இல்லாமல் திருப்பணி தொய்வு

திருமுறை நாதேசுவரர் கோவில் நிதி இல்லாமல் திருப்பணி தொய்வு

கடலுார் : கடலுார் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமுறை நாதேசுவரர் கோவில் திருப்பணி, போதிய நிதி ஆதாரம் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியும், புதுச்சேரி ஏம்பலம் அருகேயும் அமைந்துள்ளது பள்ளிப்பட்டு கிராமம். இங்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த திருமுறை நாயகி உடனுறை திருமுறை நாதேசுவரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் பரமரிப்பின்றி சிதைவுண்ட நிலையில் இருந்தது. சிவனடியார்கள் மற்றும் ஊர் மக்கள் முயற்சியால் சிவலிங்கத்தை வெளியில் எடுத்து, கருவறை இருந்த இடத்தில் எழுந்தருள செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால், அங்கு சிறிய கொட்டகை அமைத்து, 2007 ம் ஆண்டு முதல் வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில், 2016 ம் ஆண்டு கார்த்திகை திருவிளக்கு பூஜை நடத்திய திருப்பூர் நமச்சிவாய அறக்கட்டளை தலைவர் வெற்றிவேல், திருவாடுதுறை தேவாரம் பயிற்சி மைய ஆசிரியை நெய்வேலி வசந்தி ஆகியோர், கோவிலை புதுப்பிக்க முடிவு செய்தனர்.தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மற்றும்திருமுறை நாதேசுவரர் கோவில் வழிப்பாட்டுக் குழு தலைவர் ஞானவேலு, புதுச்சேரி வெங்கடபதி மற்றும் பள்ளிப்பட்டு கிராமவாசிகளின் முயற்சியால், 2017ம் ஆண்டு திருப்பணி துவங்கி கற்கோவிலாக கட்டும்பணி நடந்து வருகிறது.

மூலவருக்கு முழுமையாக கற்கோவில் கட்டும் வேலை விதானம் வரை நிறைவுற்றது. போதிய நிதி இல்லாததால், அம்பாள் கோவில் விதானம், மகாமண்டபம், சுற்றுச்சுவர், தரைப்பகுதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.எனவே, இக்கோவில் திருப்பணி தொய்வின்றி நடக்க, பொதுமக்கள், சிவனடியார்கள் நிதியுதவி அளித்து ஆன்மிக பணியில் பங்கெடுக்க வேண்டும் என, கோவில் திருப்பணிக்குழு, பள்ளிப்பட்டு கிராம மக்கள் மற்றும் திருமுறை நாதேசுவரர் வழிபாட்டு மன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !