உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுக்கட்டை இல்லாமல் விநாயகருக்க பூஜை

கொழுக்கட்டை இல்லாமல் விநாயகருக்க பூஜை

திருச்சி; கொரோனா ஊரடங்கு காரணமாக, திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலில், வழக்கமான நெய்வேத்திய படையல் செய்து, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது.திருச்சி, மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை ஏறிச் செல்லும் வழியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் அருள் பாலிக்கின்றனர்.விநாயகர் சதுர்த்தியின் போது, திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தலா, 75 கிலோ வீதம், 150 கிலோவில் இரண்டு மெகா கொழுக்கட்டை தயாரிக்கப்படும். இதில் ஒரு கொழுக்கட்டை, மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்படும்.மற்றொரு கொழுக்கட்டையை துாளியில் கட்டி எடுத்துச் சென்று, மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபாடு நடத்துவர்.பின், அந்த கொழுக்கட்டை, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். சதுர்த்தி நாளன்று காலை முதல் இரவு வரை, பல ஆயிரம் பக்தர்கள், மலை மீது ஏறி உச்சிப்பிள்ளையாரை வழிபடுவர். தொடர்ந்து, 12 நாட்களுக்கு விநாயக பெருமான் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலிப்பார். 13ம் நாளில், உற்சவ மாணிக்க விநாயகருக்கு, 27 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நேற்று மலைக்கோட்டை விநாயகர் கோவிலில், மெகா கொழுக்கட்டை படையல் செய்து, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்படவில்லை.ஆனால், மலர்கள், மாவிலை தோரணம் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவிலில், அர்ச்சகர்களை கொண்டு, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிேஷக ஆராதனை மற்றும் நெய்வேத்திய படையலுடன் சதுர்த்தி பூஜை செய்யப்பட்டது. தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவத்துடன் சதுர்த்தி விழா நேற்று நிறைவு பெற்றது.இங்கு, 10 நாட்கள் சதுர்த்தி விழா நடக்கும். ஆக.,13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சுவாமி புறப்பாடு, தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம், சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்வுகள், ஊரடங்கால் நடக்கவில்லை. பக்தர்களை அனுமதிக்காமல் ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தன. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, தங்க கவசத்தில் மூலவர் எழுந்தருளினார். காலை அஸ்திரதேவர் மற்றும் அங்குசதேவர், கோவிலில் இருந்து தெப்பக்குளம் புறப்பட்டனர். உற்சவ விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிேஷகம், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர். மதியம் முக்குறுணி மோதகம் படையல் செய்தனர். இரவு ஐம்பெரும் சுவாமிகள் எழுந்தருளினர். pillaiyarpatti temple official யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. சதுர்த்தியில் சிறப்பு பெற்ற மூலவர் சந்தனக்காப்பு அலங்காரம் ஊரடங்கிற்கு பின் நடக்கும் என அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்பன் செட்டியார், குருவிக்கொண்டான்பட்டி செந்தில் செட்டியார் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !