காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் பிரம்மோற்சவம் துவக்கம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலில், நேற்று காலை கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவம் துவங்கியது. காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மே மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம், நேற்றுதுவங்கியது. காலை 5.30 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத, கொடியேற்றம் நடந்தது.அதன்பின், சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், தினமும் காலை மற்றும் இரவு, சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிரபல உற்சவமான கருட சேவை, 19ம் தேதி நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு, கோபுர தரிசனம் நடைபெறும். இரவு ஹனுமந்த வாகனம் உற்சவம் நடைபெறும். 29ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறும்.