திருக்கோஷ்டியூர் பெருமாள் தெப்பக்குளத்தில் அகற்றப்படாத குப்பை
சிவகங்கை,:சிவகங்கை அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில்பரிகாரத்திற்கு வரும் பக்தர்கள் ஆடைகளை விட்டுசெல்வதால் அசுத்தமடைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூரில் சவுமியநாராயண பெருமாள் கோயில் உள்ளது. ஹிந்து கடவுள் பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தது இந்த ஸ்தலத்தில் தான். ராஜராஜன் காலத்து கல்வெட்டுக்கள் அதிகளவில் உள்ளன. இங்கு கருவறை மீதான அஷ்டாங்க விமானத்தின் நிழல் ஒரு போதும் தரையில் விழுவதில்லை. இத்தனை பெருமை வாய்ந்த கோயில் தெப்பத்திருவிழாவிற்காக நெடுஞ்சாலையோரத்தில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் பரிகார பூஜை செய்து குளித்துவிட்டு தங்களது ஈர உடைகளை படித்துறையில் விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கோயில் தெப்பக்குளம் அசுத்தமடைகிறது. முறையான பராமரிப்பு செய்யப்படாததால் தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளும் மிதந்து வருகிறது. இப்பகுதியில் புனித நீராட வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. கோயில் நிர்வாகத்தினர் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து பக்தர்கள் புனித நீராட நடவடிக்கை எடுக்க வேண்டும்.