உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா கால்நாட்டு

தூத்துக்குடி பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா கால்நாட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி பெருமாள் கோயிலில் வைகாசி பத்து நாள் பெருவிழாவிற்கு நேற்று கால்நாட்டு விழா கோலாகலமாக நடந்தது. ஏழாம் திருநாள் அன்று பூம்பல்லாக்கும், 9ம் திருநாள் அன்று தேரோட்டமும் நடக்கிறது. தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், சுவாமி, அம்மன் எழுந்தருளல் என்று அமர்களப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இத் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசங்காத்த பெருமாள் மற்றும் கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விழாவை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. வைகாசி பெருந்திருவிழாவை ஒட்டி பெருமாள் கோயிலில் திருவிழா கால்நாட்டு விழா நேற்று நடந்தது. காலையில் இருந்து வைகுண்டபதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர் கும்பத்திற்கும், கால்நாட்ட உள்ள கம்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கால்நாட்டு கம்பிற்கு பக்தர்கள் சந்தனம், குங்குமம் பூசினர். பின்னர் மேளதாளம் முழங்க திருவிழாவிற்கு கால்நாட்டப்பட்டது. பெருமாள் கோயில் அர்ச்சகர் வைகுண்டராமன், அர்ச்சகர் சங்கர், கோயில் பணியாளர்கள் சண்முகசுந்தரம், விநாயகம் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் 25ம் தேதி வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதில் இருந்து பத்து நாட்கள் தினமும் சுவாமி, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வைகுண்டபதி பெருமாளும், பூதேவியும் முக்கிய வீதிகள் வழியாக உலா வருதல் நடக்கிறது. யானை, சிங்கம், ஆதிசேஷன், அனுமன், தோளுக்கு இனியான், கருடன் உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது. பத்து நாளும் கோயிலில் பல்வேறு ஆன்மிக சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருமாள் கோயில் இளைஞரணி சார்பில் ஏழாம் திருநாள் அன்று பூம்பல்லாக்கு பெரிய அளவில் நடக்கிறது. வரும் 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் நடத்துவதற்கு வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள், உபயதாரர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !