வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழா ஆலோசனை கூட்டம்
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். வரும், 17ல் புரட்டாசி மாதம் துவங்கவுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டு புரட்டாசி திருவிழா மற்றும் தேர் திருவிழா நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. அதில், புரட்டாசி திருவிழா நடத்தப்படும். தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் காலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பக்தர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும், பக்தர்கள் தேங்காய் உடைத்தல், கற்பூரம், நெய் விளக்குகள் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும், 65 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கலெக்டர் அன்பழகன், அரசு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.