ஸ்மார்ட் சிட்டி பள்ளத்தில் பாண்டியர் கால கல்வெட்டு
மதுரை : மதுரை வடக்குமாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டிய போது தென்பட்ட கல்வெட்டை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இக்கல்வெட்டை கண்டறிந்தவர் வில்லாபுரம் சிவக்குமார். போலீஸ் வீட்டுவசதி கழக ஒப்பந்தக்காரர்.அவர் கூறியதாவது: பழங்கால கட்டுமானங்கள் மீது ஆர்வம் இருப்பதால் பயணிக்கும் இடங்களில் உள்ள கட்டுமானங்களை கவனிப்பேன். வடக்கு மாசி வீதி ராமாயண சாவடி வழியேசென்ற போது ஒரு ஜூஸ் கடை அருகே இக்கல்வெட்டை பார்த்தேன்.ஸ்மார்ட் சிட்டி கட்டுமானத்திற்காக பள்ளம் தோண்டியதால் கட்டடத்தின் கீழே இருந்த கல்வெட்டை பார்க்க முடிந்தது. இதை படியெடுத்து பாதுகாக்க தொல்லியல் துறைக்கு மனு கொடுத்தேன். மதுரையை விரிவாக்கம் செய்ய அகழியுடன் இருந்த பாண்டியர் கால கோட்டையை அன்றைய கலெக்டர் பிளாக் பார்ன் இடிக்க கூறினார். இடிப்பவர்களே கட்டட கற்களை கொண்டு செல்ல அனுமதித்தார்.இந்த கல்லும் இடிக்கப்பட்ட கோட்டை கல்லாக இருக்கலாம் என்றார்.இதுபோல் கிடைக்கும் கல்வெட்டுக்கள் அரசு அருங்காட்சியக கட்டுப்பாட்டில் வரும் என்பதால், சிவக்குமார் மனுவின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படும் என காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்தார்.