உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம்: காரமடை பகுதியில் உள்ள, பெருமாள் கோவில்களில், சிறப்பு  வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் மார்ச் மாதத்திலிருந்து, அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, தளர்வுகள் செய்து கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம், அதிகளவில் காணப்படுகின்றன.

நேற்று காரமடை அரங்கநாதர் கோவிலில், சனிக்கிழமை அடுத்து அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிலர் இந்த வாரம் சனிக்கிழமையை, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையாக கருதி, விரதமிருந்து கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று காரமடையை அடுத்த, கே.புங்கம்பாளையத்தில் திம்மராயப் பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் திம்மராய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !