கோயில்களில் மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கு தனி நேரம்
சென்னை: கோயில்களில் மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக அறநிலையத் துறை குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த அரசு இம்மாதம் ௧ம் தேதி வழிபாட்டு தலங்களை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்தது.அதேநேரம் பாதுகாப்பு கருதி 10 வயதிற்கு உட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் தரிசனத்திற்கான தடை தொடர்கிறது. கோயில்களில் தரிசனத்திற்கு வருபவர்களில் 80சதவீதம் பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அவர்களின் ஒரே பொழுதுபோக்கும் கோயில்கள் தான். கோயில்களில் நீடிக்கும் தடையால் மூத்த குடிமக்கள் தவித்து வருகின்றனர்.எனவே பாதுகாப்புடன் தரிசனம் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.