திருப்பதியில் இரண்டாவது பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் சுவாமி மாடவீதிகளில் வலம்வருவார் அவரை தரிசிப்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். திருமலையில் நடைபெறும் மிகப்பெரிய விழாக்களில் பிரம்மோற்சவ விழாவே முதன்மையானது.இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்.வருடாந்திர முதல் பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.கொரோனா தொற்று அபாயம் காரணமாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெறாமல் கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் காலையிலும் மாலையிலும் சுவாமி விதம் விதமான வாகனங்களில் கோவிலுக்குள் உள்ளேயே வலம் வந்தார் இந்த காட்சியை அர்ச்சகர்கள் நடத்திவைக்க கோவில் அறங்காவலர்களும் அதிகாரிகளும் மட்டுமே தரிசித்தனர் தேவஸ்தான தொலைக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவம் வருகின்ற 16102020 ந்தேதி துவங்கி 24102020 ந்தேதி நிறைவு பெறுகிறது. இந்த பிரம்மோற்சவத்தை கோவிலுக்குள் நடத்தாமல் சில கட்டுப்பாடுகளுடன் வழக்கம் போல வெளியில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி காலையிலும் இரவிலும் சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் வாகனங்களில் வலம் வருவார். இந்த நாட்களில் முன்னுாறு ரூபாய் கட்டி தரிசன டிக்கெட் எடுத்துள்ளவர்கள் மட்டும் மாட வீதியில் அமைந்துள்ள காலரியில் அமர்ந்து சுவாமி வாகனங்களில் வலம் வருவதை தரிசிக்கலாம்.மக்கள் நிறைய பேர் நெருக்கமாக இருந்து தேர் இழுக்க வேண்டும் என்பதால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக புஷ்பக விமான வாகன சேவை நடத்தப்படும். குறைந்த அளவிலான கலைக்குழுவினர் சுவாமி முன் நடனமாடிச் செல்ல அனுமதிக்கப்படுவர்.இந்த நாட்களில் வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான பிரசாதம் மற்றும் லட்டு போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என்பது ஒரு குறை என்றாலும் கோவிலுக்குள் யாருமே இல்லாமல் நடத்தப்பட்டதற்கு மாற்றாக குறைந்தளவு பக்தர்களாவது பார்க்கும்படியாக இந்த முறை பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து சந்தோஷப்பட வேண்டியதுதான் தொற்று பயம் குறைந்தால் கூடுதலாக பக்தர்களை அனுமதிப்பர் என்று எதிர்பார்க்கலாம். -எல்.முருகராஜ்.