ராவணனை வழிபடும் மஹா மாநில மக்கள்
அகோலா: நாடு முழுதும் தசரா பண்டிகையில், ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவில் ஒரு கிராம மக்கள், ராவணனை வழிபடுகின்றனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.இம்மாநிலத்தின் சங்கோலா கிராமத்தில், 10 தலைகள், 20 கரங்களில் ஆயுதங்களுடன், இலங்கை மன்னன் ராவணன் கருங்கற்சிலையாக காட்சி அளிக்கிறார். அவரை, அங்குள்ள மக்கள், 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுளாக வழிபடுகின்றனர். இது குறித்து, பூஜாரி ஹரிபாவ் லகாதே கூறியதாவது: நாடு முழுதும் தீமைக்கு எதிரான வெற்றியை குறிக்கும் வகையில், தசரா பண்டிகையில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.இந்த கிராம மக்கள், ராமபிரானை நம்புகின்றனர். அறிவுக்கூர்மை மிகுந்த ராவணனை வணங்குவதால் மகிழ்ச்சி, அமைதி, மன நிறைவு கிடைப்பதாக நினைக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். ராவணன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில், நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, விழா எளிமையாக நடக்கிறது.