உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை

தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை

திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தண்ணீர் தேங்கும் விதமாக, 26 லட்சம் ரூபாயில், களிமண் லேயர் கட்டமைப்பு அமைக்கும் பணி துவங்கியது. சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பழமையானது. கோவிலினுள் பிரம்ம தீர்த்த குளமும், வெளியே ஆதிசேஷ தீர்த்த குளமும் உள்ளது.ஆண்டுதோறும், தைப்பூச தினத்தன்று, ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தெப்போற்சவம் நடைபெறும். கடந்த 2015ல், கொட்டிய பெருமழைக்கு குளம் நிரம்பி, 10 ஆண்டுகளுக்கு பின், 2016ல், தெப்போற்சவம் நடந்தது.

பின், 2017ல், குளத்தில் தண்ணீர் இல்லாததால், தெப்போற்சவம் நடக்காத நிலையில், 2018ல், குளத்தில் பாதி தண்ணீர் நிரம்பியதால், நிலை தெப்போற்சவம் நடந்தது.தொடர்ந்து, 2019 மற்றும் 2020ல், வெளிகுளத்தில் தண்ணீர் இல்லாததால், மாற்று ஏற்பாடாக, கோவிலினுள் இருக்கும் பிரம்ம தீர்த்த குளத்தில், நிலை தெப்போற்சவம் நடத்தப்பட்டது. மணல் பூமி மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புகளால், நிலத்தடி நீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதால், ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.தீர்வாக, குளத்திற்கு வரும் தண்ணீர் வற்றாதபடி, களிமண் லேயர் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. திருக்கோவில் நிதியான, 26 லட்சம் ரூபாய் செலவில், களிமண் லேயர் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. உதவி ஆணையர் சித்ரா தேவி தலைமையில், திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான, திருவள்ளூர் மாவட்டம், வெள்ளிவாயிலில் உள்ள இடத்தில் இருந்து, களிமண்ணை எடுத்து, குளத்தில் நிரப்பும் பணி நடக்கிறது.இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான குளத்தில், 3,600 கனமீட்டர் களிமண், 180 டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்பட்டு, 1.5 அடி தடிமனுக்கு லேயர் கட்டமைக்கும் பணி, ஒரு மாதத்தில் முடியும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். பணி நிறைவுறும் பட்சத்தில், 25 அடிக்கு மேல், ஆதிசேஷ தீர்த்த குளத்தில் தண்ணீர் தேக்க முடியும். கட்டமைக்கப்படும் களிமண் லேயரால், தண்ணீர் எளிதில் வற்றாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !