உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரம் திருவிழா

ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரம் திருவிழா

டி.கல்லுபட்டி:மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டியில் ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரம் திருவிழா நடந்தது.

தேவன்குறிச்சி, டி. கல்லுப்பட்டி, சத்திரபட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளாங்குளம் ஆகிய ஊர்கள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசியில் முத்தாலம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர். அம்மாபட்டியில் ஏழு ஊர்களுக்கு அம்மன் உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு அவரவர் ஊர்களிலிருந்து தலை சுமையாக ஆறு சப்பரங்களை அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து முத்தாலம்மனை அவரவர் ஊருக்கு எடுத்துச்சென்று வழிபடுவது இத்திருவிழாவின் சிறப்பம்சம்.

கிராமங்களில் காப்பு கட்டி 15 நாள் விரதம் இருந்த இளைஞர்கள் 50 அடி உயரத்தில் அம்மன் சப்பரம் செய்து, அதைத் தூக்கிக் கொண்டு பக்தர்கள் புடைசூழ அம்மாபட்டிக்கு நேற்று காலை வந்தனர். 6 சுவாமி சிலைகளுக்கு அந்தந்த ஊர் நாட்டாமைகள் அம்மனுக்கு முதல் மரியாதை வழங்கினர். அதன் பின் 6 சப்பரங்களில் சிலைகளை வைத்து அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர். ஏழு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக எங்கு சென்றிருந்தாலும் இத்திருவிழாவில் பங்கேற்க வந்து விடுவார்கள். ஜாதி பேதமின்றி, அரசியல் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையாக கொண்டாடுவர். திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அமைச்சர் உதயகுமாருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !