பா.ஜ.,வின் வெற்றிவேல் யாத்திரை: விழுகிறது தடை?
சென்னை: தமிழக பா.ஜ.,வின், வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரிக்க, அரசு முடிவெடுத்திருப்பதாக, உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்த பின், பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை பைசல் செய்தது.இன்று முதல் டிசம்பர், 6ம் தேதி வரை, திருத்தணி துவங்கி திருச்செந்துாருக்கு, வெற்றிவேல் யாத்திரை நடத்த உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிவித்துள்ளார். இதற்கு தடை கோரி, செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
ஆஜர்: மனுக்களில், கொரோனா தொற்று காரணமாக, மத நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டன. மாநிலம் முழுதும், வெற்றிவேல் யாத்திரை நடத்தும் போது, பொது மக்கள் அதிகம் கூடுவர். அதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. அரசு எடுத்து வரும் முயற்சிகளும் வீணாகும் என, கூறப்பட்டுள்ளன.இம்மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் ஸ்டாலின் அபிமன்யூ, புனீத் ஆஜராகினர்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், பா.ஜ., தலைவர் சார்பில், வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராயினர்.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதாடியதாவது: மாநில பா.ஜ., செயலர், அக்., 15ல் அளித்த மனுவுக்கு, 17ம் தேதி, டி.ஜி.பி., பதில் அளித்துள்ளார். அந்தந்த மாவட்ட எஸ்.பி.,யை அணுகும்படி, டி.ஜி.பி., கூறியுள்ளார். உள்ளூரில் நிலவும் சூழ்நிலை, அரசின் வழிமுறைகளை கருத்தில் எடுத்து, எஸ்.பி.,க்கள் பரிசீலிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். இம்மாதம், 2ம் தேதி திருவள்ளூர் எஸ்.பி.,க்கு மனு அளித்துள்ளனர். ஏற்கனவே, 2020 மார்ச்சில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், போராட்டம், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என, கூறியுள்ளது.
தமிழக அரசு, அக்டோபர், 31ல் பிறப்பித்த வழிமுறைகளில், நவம்பர், 15க்குப் பிறகே, மத, அரசியல், சமூக கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்; 100 பேருக்கு மேல் கூடக்கூடாது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, விழாக்காலம் வருகிறது. வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது, மூன்றாவது அலைகளுக்கான அச்சுறுத்தல் உள்ளது. அதனால், மத்திய அரசின் வழிமுறைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை கருதி, மனுவை நிராகரிப்பது என, அரசு முடிவெடுத்துள்ளது. இதை, அவர்களுக்கு இன்று தெரிவிப்போம்.இவ்வாறு, அவர் வாதாடினார். பா.ஜ., தலைவர் சார்பில், வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதாடியதாவது:விண்ணப்பம் நிலுவை யில் உள்ளது. எங்கள் தரப்பை கேட்காமல், அதன் மீது முடிவெடுக்க முடியாது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் சகஜமாக போய் வருகின்றனர். பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
உத்தரவு: மத்திய அரசின் நிலைக்கு முரணாக, மாநில அரசு ஒரு நிலையை எடுக்க முடியாது. நோய் தொற்று குறைந்திருப்பதாக, அரசே தெரிவித்துள்ளது. தற்போது, பள்ளிகளை திறக்கலாமா என, அரசு பரிசீலிக்கிறது.யாத்திரை ஒரே இடத்தில் நிற்காது; வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். அதிக எண்ணிக்கையில் கூட மாட்டார்கள். அரசு எடுத்திருக்கும் முடிவை, நீதிமன்றத்தில் தான் தெரிவிக்கின்றனர். அனுமதி கோரி நாங்கள் விண்ணப்பித்துள்ளோம். எங்கள் தரப்பை கேட்கட்டும். நிபந்தனையை நாங்கள் மீற மாட்டோம். இந்த வழக்கு, முன்கூட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் வாதாடினார். முத்தரப்பு வாதங்களையும் கேட்ட பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவால் பாதிக்கப்படுபவர், அதை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுகலாம். இந்த இரண்டு மனுக்களும், பைசல் செய்யப்படுகின்றன.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.